விழுப்புரத்தில் தனியார் மண்டபத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொன்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 11க்கும் மேற்பட்டோர் ஆட்டோவில் வந்து ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்த பின்னர் இவர்கள் ஆட்டோவில் வீடு திரும்பிய பொழுது விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் ஆட்டோ அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்தில் சென்று மீட்டனர் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.




மேலும் இந்த விபத்து குறித்து மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் கூறியதாவது:


விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சொந்த ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 11 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.


விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்றது. மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பிய சிறிது நேரத்தில், எனக்குக் கிடைத்த இந்த விபத்து குறித்த தகவல் மிகவும் வேதனை அளிக்கிறது.


விழுப்புரம் கூட்டத்தில் கலந்து கொண்ட, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, பழனி, சோபன்பாபு, கணேசன், வீரப்பன், சுப்பிரமணி, நாகராசு, பாலு, கோபாலகிருஷ்ணன், குணசேகர், நாவப்பன் ஆகிய 11 பேரும் தங்களின் சொந்த ஊருக்கு தானி மற்றும் இருசக்கர ஊர்திகளில் சென்றுள்ளனர். விக்கிரவாண்டியில் கும்பகோணம் சாலை பிரியும் இடத்தில் தேனீர் குடிப்பதற்காக இவர்கள் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த மகிழுந்து மோதி தானி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேரும் பலத்த காயமடைந்தனர். 



உடனடியாக அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மயிலம் தொகுதி பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலாளர் பாலசக்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தனர். மருத்துவர்களிடம் பேசி அவர்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நான் தொடர்ந்து விசாரித்து வருகிறேன். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெறவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.