விழுப்புரம்: மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தினர்.


மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம்:


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாளான 19 ஆம் தேதி மயானக்கொள்ளை விழாவும், 23-ம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது.  மாசி பெருவிழாவினை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அங்காளம்மன் கோவிலின் 7-ம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது.


தேரோட்டம்:


தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.  பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோவிலின் வடக்கு வாயிலிருந்து பம்பை - உடுக்கை, மேளதாளங்கள் முழங்க  தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மனே என பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர்.  விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தீமிதி திருவிழா:-


விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி அளவில் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மன் அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் கொண்டு வரப்பட்டார். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தப்பட்டார்.


அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும், பூசாரிகள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினர். அவர்கள் இறங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


புஷ்ப பல்லக்கில் சாமி வீதி


25-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும், 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.


2-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.