விழுப்புரம் : 2004 ஆம் ஆண்டு சுனாமியில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது , விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் தான் மிகவும் குறைந்தளவு பாதிப்புகள் பதிவாகியிருந்தது . இதற்கு முக்கிய காரணமே இங்கு இயற்கையாக உருவாகியிருக்கும் மண்மேடுகள்தான் என்று பதிவு செய்திருக்கின்றனர் விழுப்புரம் பகுதியில் சுனாமிக்கு பிறகு ஆய்வு நடத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக மரக்காணம் பகுதியில் 19 மீனவ கிராமங்களுக்கும், இங்கு அமைந்துள்ள மணல்மேடுகள்தான் இயற்கை அரணாக செயல்பட்டு வருகின்றது.
பல இயற்கை சீற்றங்களை கண்டிருந்த போதிலும் , டிசம்பர் 26, 2004-ஆம் ஆண்டு உலகை புரட்டிப்போட்ட ஆழிப்பேரலையை யாராலும் மறந்திருக்க முடியாது... இந்த சுனாமியின் தாக்குதலால் உலகெங்கும் 2 ,30,000 மனித உயிர்கள் சில நிமிடங்களில் சூறையாடப்பட்டது. சுனாமி என்ற பெயரை அதுவரை கேள்விப்படாத தமிழ்நாட்டில் கூட , பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, இறந்தவரின் உடல்களுக்கு கடைசி ஈமச்சடங்கு கூட முறையே செய்ய முடியாமல், பிணக்குவியல்களை கடற்கரை ஓரங்களில் புதைக்கப்பட்ட காட்சிகள் , 17 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நீங்காத துயரமாகவே இருந்துவருகிறது .
மரக்காணம் பேரூராட்சியை பொறுத்தவரையிலும் முட்டுக்காடு தொடங்கி - புத்துப்பட்டு வரையுள்ள 25 கிலோமீட்டர் ஈசிஆர் பகுதியில் 18 மீனவ கிராமங்கள் உள்ளது. மீன்பிடி மற்றும் உப்புதயாரிப்பது தான் இங்கிருக்கும் மக்களுக்கு பிரதான தொழில். வங்காள விரிகுடாவை ஒட்டி இந்த மீனவ கிராமங்கள் அமைந்துள்ளதால், புயல் சின்னம் உருவாகும்போதும் , பருவமழை காலங்களிலும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருக்கும். இது போலவே மாதத்தில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படும் . இதுபோன்ற நேரங்களில் மரக்காணம் கடற்கரையோர பகுதிகளில் இயற்கையாக அமைந்திருக்கும் 50 அடி உயரம் வரையுள்ள மணல் மேடுகள்தான்.
கடல் சீற்றத்திலிருந்து மீனவ மக்கள் வசிக்கும் வீடுகள் , கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் அடையாமல் காத்து வந்தது .ஆனால் கடந்த 10 வருடங்களாக மரக்காணம் பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ள இறால் குஞ்சு பொறிப்பக்கங்கள், ரியல் எஸ்டேட் கம்பெனிகள் , சட்ட விரோதமாக மணல்மேடுகளை கரைத்து பீச் ரெசார்ட்களை கட்டி வருகின்றனர். இந்த விதி மீறல்களால் சமீபகாலமாக கடல் சீற்றத்தின்பொழுது, வீடுகள் மற்றும் கப்பல்கள் சேதம் அடைவது , உப்பளங்களில் தண்ணீர் புகுந்து நஷ்டம் ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புக்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் , கடலோர மீனவ கிராமங்கள் மட்டும் இல்லாமல் , ஒட்டுமொத்த மரக்காணம் பேரூராட்சியும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
மரக்கானம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாரவாக்கம், கைப்பானி குப்பம் தீர்த்தவாரி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய கடற்கரை பகுதியில் தனியார் ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் கடலோரத்தில் இயற்கை அரணாக உள்ள மணல்மேட்டை அழித்து கடல்நீர் ஊரினுல் உட்புகும் வகையில் மணல் மேட்டையை தற்போது கரைத்துள்ளனர்,
ஆனால் மீண்டும் அதே பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 3000 லாரி அளவு மணல் திருடப்பட்டு ஊருக்கு பாதுகாப்பாக உள்ள மணல் மேட்டை அழித்து நீர்நிலைகளில் கொட்டி வருகின்றனர், இதனால் இயற்கை பேரிடர் காலங்களில் கடல் ஊரினுல் புகுந்து 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கும் நிலைமை வந்துள்ளது.
இதுபோன்று கடற்கரைப் பகுதியில் கட்டிடங்கள் அமைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது, அதில் பூர்வகுடிகளாக வாழும் மீனவர்களுக்கு கூட கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை அவர்களுக்கு வீடு கட்ட அனுமதிப்பது கிடையாது ஆனால் தற்போது மரக்காணம் கடல் பகுதியில் CRZ-Zone I எனப்படும் பகுதியிலேயே கட்டிடங்களை அமைத்து கடல் நீர் ஊருக்குள் உள்புகும் வகையில் ஊருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், புயல் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மரக்காணம் பகுதியில் கடல் நீர் கண்டிப்பாக உட்புகும், அதிகபடியான கடல் சீற்றம் ஏற்படும் இடமாக மரக்காணம் மாறிவரும் நிலையில் இதுபோன்ற மணல் மேடுகளை கரைத்துள்ளது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.