விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள நல்லாளம் கூட்டுப் பாதையில் எம். சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்-சாண்ட், ஜல்லி விலை உயர்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகள் அமைந்துள்ளது இந்த குவாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதிகளில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குவாரி உரிமையாளர்கள் மாதத்திற்கு ஒருமுறை விலையேற்றம் செய்து வருகின்றனர்.
இதை கண்டிக்கும் வகையில் இன்று மரக்காணம் வட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து நல்லாளம் கூட்டு சாலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாளம் கூட்டு பாதை சந்திப்பில் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்திகளை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமிபதி கூறியதாவது:-
2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு யூனிட் ஜல்லி விலை 1400 ரூபாய்க்கும், ஒரு யூனிட் எம் சான்ட் விலை 2800 ரூபாயுக்கும், பி.சான்ட் 3600 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு யூனிட்டுக்கு 500 ரூபாய் விலை ஏற்றம் செய்தனர். மேலும் நேற்றைய தினம் கூட கட்டுமான பொருட்களின் விலையை குவாரி உரிமையாளர்கள் ஏற்றம் செய்துள்ளனர், மாதத்திற்கு ஒரு முறை விலை ஏற்றம் செய்வதால் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
நுரையீரல் பாதிப்பு
மேலும், குவாரிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் குவாரிகளில் இருந்து வரும் தூசுக்களால் அந்த பகுதிகள் வாழும் மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர், இதனை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. செவிசாய்க்கவும் இல்லை. எனவே இந்த போராட்டத்தை அரசு கவனத்தில் கொண்டு விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.