விழுப்புரம் :  திண்டிவனம் பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம், கல்லூரி மாணவியின் தாய் கண்ணீர் மல்க வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement


கண்ணீர் மல்க வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஆட்சியர்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம், கல்லூரி மாணவியின் தாய் கண்ணீர் மல்க வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.


இதனை இன்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார். அப்போது அவர், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு காத்திருந்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரது மனைவி செல்வராணி என்பவர் தனது மகள் பிரியா செஞ்சி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதாகவும், அவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஏற்கனவே கல்வி பயின்ற திண்டிவனம் தேசிய மேல் நிலைப்பள்ளியில் உள்ளதாகவும்,


அந்த மதிப்பெண் சான்றிதழ் தற்போது தேவைப்படும் நிலையில் , அந்தப் பள்ளிக்குச் சென்று கேட்கும் பொழுது மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் மட்டுமே வழங்குவதாகவும், அதனை கல்லூரி நிர்வாகம் வாங்க மறுப்பதாகவும், தனக்கு ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் தேவை என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்தே மாவட்ட கல்வி அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறியதுடன், உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வலியுறுத்தினார். இந்த செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .


சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஆய்வு


தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பணிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 29.10.2025 அன்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தொகுதி வாக்கு பதிவு அலுவலர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டது.


அதனடிப்படையில், இன்றைய தினம் 12-வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70 -செஞ்சி சட்டமன்ற தொகுதி, செஞ்சி 71 மயிலம் சட்டமன்ற தொகுதி, 72 -திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, 73 வானூர் சட்டமன்ற தொகுதி, 74 - விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, 75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 76 திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 72 திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகம், திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட மகாத்மா காந்தி நகர், பாரதிதாசன் தெரு, சேடன்குட்டை தெரு, மரக்காணம் வட்டம் பிரம்மதேசம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிறுவாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தினை ஒரு வாக்காளருக்கு 2 படிவத்தினை வழங்கப்பட வேண்டும்.


மேலும், வாக்காளர்களை எங்கும் அலைக்கழிக்காமல் வாக்காளர்களின் இல்லத்திற்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று வாக்காளர்களின் சரியான விவரத்தினை கேட்டறிந்து படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு படிவத்தினை வாக்காளர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.


கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.


மேற்கண்ட பணிகள் 04.11.2025 தொடங்கிய நிலையில் வருகின்ற 04.12.2025 க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தினை வாக்காளர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து திரும்பபெற வேண்டும். எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பான முறையில் இப்பணியை செய்து முடித்திட வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.