விழுப்புரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் கண்டிப்பாக தாமரை மலரனும் அப்போதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா தெரிவித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது காலி இருக்கைகள் இருந்ததை செய்தியாக வெளியிட கூடாதென பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்தும் மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய பின்னரும் பாஜக ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததால் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், ’’ஆர்ப்பாட்டத்தில் இருக்கைகள் காலியாக இல்லாமல் நிரப்பினால் மட்டுமே நமீதாவை அழைக்க முடியும். தயவு கூர்ந்து இருக்கைகளை பாஜக தொண்டர்கள் நிரப்புங்கள். காலில் விழுந்து கூறுகிறேன். தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்’’ எனக் கூறியது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா, திமுக ஆட்சிக்கு வருமுன் அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென கூறி ஏமாற்றி விட்டதாகவும், பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என வழங்கிவிட்டு அதில் பயணிக்கும் கணவர்களுக்கு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி விட்டதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய நமீதா, ’தமிழ்நாட்டில் கண்டிப்பாக தாமரை மலரனும். அப்போதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்’ என தெரிவித்துவிட்டு இறுதியாக ஜெய்ஸ்ரீராம் என கூறி உரையை முடித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களிடம் காலியாக இருக்கைகள் இருந்ததை ஏன் எடுத்தீர்கள்? செய்தி வெளியிட கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர்களை மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.