திண்டிவனம் அருகே ஆசிட் ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 டன் ஆசிட் வீணானது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அருகே ஆசிட் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் அரசு பேருந்து மோதிய விபத்தில் 30 டன் ஆசிட் சாலையில் வழிந்தோடியது. ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் அறிவழகன் (38),என்பவர் ஓட்டி சென்றார். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது, லாரிக்கு பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது மோதி, டேங்கர் லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது.


 



விபத்துக்குள்ளான அரசு பேருந்து


இதில் டேங்கர் லாரியின் பின்புறம் சேதமடைந்து, லாரியில் ஏற்றிச் சென்ற சல்பிரிக் ஆசிட் சாலையில் வழிந்தோடியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற ஒலக்கூர் காவல் நிலைய போலீசார், அவ்வழியாக சென்ற வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களை பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தியதுடன், ஆசிட் லாரியை, சாலை ஓரம் உள்ள பள்ளம் பக்கம் திருப்பி நிறுத்தி ஆசிட்டை ஓடையில் விட்டனர்.


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சாலையில் வழிந்து ஓடிய ஆசிட்டை தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


 



போக்குவரத்து பதிப்பு