கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்:


விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் விஜயதரணி. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக செயல்பட்டு வந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். 


மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதால் கட்சி மாறியதாக கூறப்படுகிறது. கட்சி மாறியதை தொடர்ந்து, தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு:


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில், எதிர்பார்த்ததை போலவே, தமிழ்நாடு மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி, வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது.


வேட்பு மனுத் தாக்கல் எப்போது?


வரும் மார்ச் 27ஆம் தேதி, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், மார்ச் மாதம் 28ஆம் தேதி, வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறப்பட்ட்டுள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளாக மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் 4ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விளவங்கோடு மட்டும் இன்றி, நாடு முழுவதும் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.


காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. குஜராத்தில் 5 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


 






மேற்குவங்கம், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.