Vijayakanth Death: சென்னையில் இன்று நடைபெற இருந்த வைக்கம் போராட்டம்  நூற்றாண்டு சிறப்பு விழா, விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


விஜயகாந்த் மறைவு:


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.


அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வைக்கம் போராட்டம் ரத்து:


விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற இருந்த வைக்கம் போராட்டம்  நூற்றாண்டு சிறப்பு விழா, விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


சென்னை நந்தம்பாக்கத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா இன்று நடைபெற இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை கொண்டாடும்  வகையில், நந்தம்பாக்கத்தில் விழா நடக்க இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது. 






முன்னதாக, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில் “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கேரளா முதலமைச்சர்  பினராயி விஜயன்  பெற்றுக்கொண்டார்.  “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை  கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.


முன்னதாக, தந்தை பெரியாரின் நினைவிடத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.