சில நாட்களுக்கு முன், உடல்நிலை சரியில்லாமல் விஜயகாந்த்(Vijayakanth) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இது தொடர்பாக தேமுதிக கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கமான சிகிச்சை என்றும், ஓரிரு நாளில் விஜயகாந்த வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் இல்லாமல், அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக தேமுதிக சார்பில், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை விபரம்...
‛‛நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்’’
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவாய் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், அவ்வப்போது, சிகிச்சைக்காக வெளிநாடுகள் சென்று வந்தார். அரசியல்வாதியாக அறியப்பட்டாலும், தற்போது அவர் முழு நேர அரசியலில் இல்லை. அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகபாண்டியன் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தான், தேமுதிக.,வை வழி நடத்தி வருகின்றனர்.
விஜய்காந்தின் உடல்நிலையால் பலமிழந்த கட்சியாக மாறி வரும் தேமுதிகவிற்கு புது ரத்தம் பாய்ச்ச, விஜயகாந்த் மகன் முழு முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், விஜயகாந்த உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்றும் அவரது மனைவி பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், அது தொடர்பான எந்த அறிகுறியும் வரவில்லை. இருப்பினும் அவ்வப்போது விஜயகாந்த் போட்டோக்கள் வந்து கொண்டே இருந்தன .
வீட்டில் மகன்களோடு விழாக்களை கொண்டாடுவது, தலைவர்கள் சந்திப்பு என்பது மாதிரியான போட்டோக்கள் மட்டும் அவ்வப்போது வெளியிடப்பட்டது. ஆனால், அவரது அடையாளமாக பார்க்கப்பட்ட அவரசு பேச்சு, முற்றிலும் இல்லாமல் போனது, கட்சியை தாண்டி பலருக்கு வேதனையாக இருந்தது. எப்படியும் விஜயகாந்த் பேசிவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், அவ்வப் போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அட்மிட் ஆவதும், பின்னர் அவர் சிகிச்சை முடிந்து செல்வதுமாய் இருந்து வந்தது.
சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், வழக்கம் போல மீண்டும் நலமோடு வீடு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை அவரது உடல்நிலையில் மோசமான சூழல் நிலவியதால், அவரது விரலை துண்டிக்கும் அளவிற்கு சூழல்மாறியது. பாய்ந்து பாய்ந்து சண்டையிடும் விஜயகாந்த், இனி நடந்து செல்வது கூட கடினம் எனும் போது, அவருக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, கொஞ்சம் ஆறுதலாக விசயம்.