தே.மு.தி.க தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கரூர் தே.மு.தி.க  சார்பில் அவரது  உருவப்படத்திற்கு 30-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Continues below advertisement


 




தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் உயிரிழந்த நடிகர் விஜயகாந்த்தை காண சென்னை சென்று வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தேமுதிக மாவட்ட மாநகர் சார்பில் விஜயகாந்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது திருவுருவப்படத்திற்கு 30-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து தேங்காய் பழம் உடைத்து ஊதுபத்தி வைத்து கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விஜயகாந்தை காண அனைவரும் சென்னை புறப்பட்டு சென்றனர்.


 




 


கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.  அவை கேள்வி நேரத்தின்போது திமுக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க மூன்று மாத காலம் அவகாசம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.


 





 


மேயர் கவிதா கணேசன் மூன்று மாத கால அவகாசம் கொடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மாமன்ற உறுப்பினர்கள் கை தூக்கலாம் என்று தெரிவித்தார். அதற்கு ஆதரவு தெரிவித்து பெருவாரியான உறுப்பினர்கள் கை உயர்த்தியதால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டம் முடிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். இரங்கல் தீர்மானத்திற்கு மேயர் ஒப்புதல் அளித்ததன் பேரில், ஏக மனதாக மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.