Vijayakanth Death: விஜயகாந்தின் மறைவு வேதனையளிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். 


விஜயகாந்த் மறைவு:


தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் சென்னை, மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நடுவே உடல்நலன் தேறி வீடு திரும்பிய நிலையில்,  நேற்று முன் தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து, இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக  தேமுதிக தலைமை அலுவலகம் பகிர்ந்திருந்த நிலையில்,  இன்று காலை 6.10 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வரும் விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் என நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதனிடையே விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகத்திலேயே இவரது உடல் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பிடிஆர் இரங்கல்:





இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - தொண்டர்களுக்கும் – ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்” என்று குறிப்பிடிருந்தார். 

முதல்வர் ஸ்டாலின்:


"கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும்,  ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.