மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக கொடிக்கம்பம் நடும் பொழுது
மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் காயமடைந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவன தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன, பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் தேமுதிக கிளைக் கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் அதே உரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகளான ஐந்து பேருடன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும்போது மேலச்சென்ற மின்சாரக் கம்பி கொடிக்கம்பத்தில் பட்டு தூக்கி வீசியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் உடன் இருந்த தேமுதிக நிர்வாகிகள் பிரகாஷ், மதியழகன், செல்வம்.செல்வகுமார். சஞ்சய்காந்தி, ஆகிய ஐந்து பேர் காயம் அடைந்ததால் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல் அறிந்த மாவட்டச் செயலாளரும் பண்ருட்டி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.மின்சாரம் தாக்கி உயிரிழந்த விபத்து குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கொடிக்கம்பம் நடும்பொழுது மின்சாரம் தாக்கி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.