தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தி.மு.க. சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


நாளை அமெரிக்கா புறப்படும் மு.க.ஸ்டாலின்:


தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.


இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தொழிலதிபர்களுடன் நேரில் சந்திப்பு:


சென்னையில் இருந்து நாளை இரவு புறப்படும் முதல்வர் நாளை மறுநாள் (28ம் தேதி) காலை சான்பிரான்ஸிஸ்கோவிற்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், 31ம் தேதி அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சான்பிரான்ஸிஸ்கோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.


பின்னர், வரும் 2ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். சிகோவில் 12ம் தேதி வரை தங்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களை நேரில் சந்ததித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அங்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் அயலக தமிழர்களுடனான சந்திப்பையும் மேற்கொள்கிறார்.


எப்போது சென்னை ரிட்டர்ன்?


பின்னர், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து வரும் செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தில் முதலமைச்சருடன் டி.ஆர்.பி. ராஜா, முக்கிய உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர். ஏற்கனவே முதலமைச்சரின் அமெரிக்க பயண முன்னேற்பாடுகளுக்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் ஏற்கனவே ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.