மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி தேமுதிக கொடி கம்பம் நட்டபோது நிர்வாகி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், குடும்பத்தினருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜயகாந்தின் மகன் குழந்தைகளின் கல்வி செலவை தேமுதிக ஏற்கும் என அறிவித்துள்ளார்.

 

மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவையொட்டி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் தேமுதிக கிளைக் கழக துணைச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் சிலர் தேமுதிக கொடி கம்பம் நட்டபோது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் உயிரிழந்தார். மேலும் நிர்வாகிகள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜயகாந்த் பிறந்தநாள் அன்று தேமுதிக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.



 

இந்த நிலையில் பண்ருட்டி அடுத்துள்ள நடுக்குப்பம் கிராமத்தில் உயிரிழந்த வெங்கடேசன் அவர்களது இல்லத்திற்கு சென்ற விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உயிரிழந்த தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் இரண்டு மகன்களின் கல்விச் செலவை தேமுதிக ஏற்பதாகவும், மேலும் இது போன்ற நிகழ்வு தமிழகத்தில் நிகழாமல் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிகவினர் மிகுந்த கவனமுடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.