பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என தவெக மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தவெகவின் அரசியல் வழிகாட்டிகள்:


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது.  


அப்போது, கட்சி தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த Rampஇல் விஜய் நடந்து சென்றார். இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை, கழுத்தில் அணிந்து கொண்டு மேடை நோக்கி விஜய் சென்றார்.


இதை தொடர்ந்து, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், கட்சியின் அரசியல் வழிகாட்டிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.


"கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை"


பின்னர் பேசிய விஜய், "அரசியல் எதற்கு நடித்தோமா நான்கு காசு பார்த்தோமா எனதான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன்.  நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம் இல்லையா ? , நம்மை வாழவைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா? என நினைத்தேன், அதனால்தான் அரசியலுக்கு வந்தேன்.


பெரியாரின் கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்றார்.




சாதி மத மற்றும் மொழி வாரிய சிறுபான்மையினருக்கு, பாதுகாப்பான சகோதரத்தை சூழலை வழங்குவதுடன், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்களின் முன்னேற்றத்தில் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க: TVK Maanadu LIVE: பிளவுவாத அரசியல், ஊழல்தான் எங்களுக்கு எதிரி- கொதித்தெழுந்து பேசிய விஜய்.!