தவெக மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்புகளை கிளப்பும் தவெக மாநாடு:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்த உள்ளார்.
ஒட்டுமொத்த மாநிலமே எதிர்பார்க்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க உள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினர் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
"நீண்ட கால நண்பர் விஜய்"
அந்த வகையில், விஜய்க்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது நீண்டகால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். எனது முதல் படமாக அவரது படத்தைதான் நான் தயாரித்தேன்" என்றார்.
முன்னதாக கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜயின் அரசியல் வருகை நல்வரவாக அமையட்டும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என எஸ்.கே தனது எக்ஸ் பத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று விஜய்க்கு வாழ்த்து சொன்ன நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய்யின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்! தம்பி விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.