நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்றிருந்த போது கெம்பெகவுடா விமான நிலையத்தில் மாகா காந்தி என்பவர் அவரை எட்டி உதைத்தது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலானது. மேலும் சமூக ஊடகங்களிலும் அந்த சம்பவம் மிகப்பெரிய பேசுபொருளானது. இந்நிலையில் தான் ஏன் எட்டி உதைத்தேன் என்ற விளக்கத்தை சம்பந்தப்பட்ட நபர் யூடியூப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நாளில் விஜய் சேதுபதியும் , மாகா காந்தி என்ற நபரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது மாகா காந்தி விஜய் சேதுபதியிடம் “ தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் “ என கூறினாராம். அதற்கு விஜய் சேதுபதி “இது தேசியமா?” என கேட்டதாகவும் , அதன் பிறகு குரு பூஜை வந்திருக்கிறீர்களா என கேட்டாராம் மாகா காந்தி , அதற்கு விஜய் சேதுபதி “யார் குரு ?” என கேட்டாராம். மேலும் நீங்கள் குரு என சொல்லும் நபர் “ஜூவிஸ் கார்பெண்டர்” என நக்கலாக பதிலளித்தாராம் விஜய் சேதுபதி. பசும்பொன் முத்துராமலிங்கர் தேவரை பின்பற்றும் எனக்கு அவர் கூறிய எதுகையான வார்த்தைகள் வலியை கொடுத்ததால்தான் அப்படி செய்தேன் என தெரிவித்துள்ளார்.







ஆனால் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் ” என்னை தாக்கிய நபர் செல்போனில் படம் எடுக்க வந்ததால் அதனை தடுக்கும் போது இப்படி ஆகிவிட்டது. அவர் குடிபோதையில் இருந்தார்.மாஸ்க் போட்டுருந்ததால் அது தெரியவில்லை. மேலும்  அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டுவிட்டது. நான் பாதுகாவலர்களுடன் எப்போதும் செல்வதில்லை. நண்பர்களுடன் செல்வேன். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும் “ என பிரச்சனைக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த சூழலில்  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் , ட்விட்டர் பக்கத்தில் “ தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் -  அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/" என குறிப்பிட்டுள்ளார்.







அர்ஜூன் சம்பத்தின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.