தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஜூலை 15 ஆம் தேதியன்று ‘விஜய் பயிலகம்’ தொடங்க வேண்டும் என  நிர்வாகிகளுக்கு மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 


சமீபகாலமாக நடிகர் விஜய் அரசியலில் நுழைவது தொடர்பாக பல முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 15 ஆம் தேதி ‘விஜய் பயிலகம்’ தொடங்க வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ‘கல்வி வளர்ச்சி நாள்’ ஆக கொண்டாடப்படுகிறது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.


மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை 


முன்னதாக கடந்த சில மாதங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள்  வேறு அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடாது , தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, நற்பணிகள் செய்வது என மக்களுடன் பிணைப்பில் இருந்து வருகிறார்கள். இது விஜய் அரசியல் வருகைக்கான அறிகுறி என சொல்லப்பட்டது. தொடர்ந்து விஜய் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். 


மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மறைமுகமாக அரசியல் பேசியிருந்தார் விஜய். இப்படியான நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அனைத்து மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒருவேளை அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என விஜய் சொன்னதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.