மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு, மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இரண்டு கார்களை ஊரடங்கு காலத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக  வழங்கி மருத்துவ சேவைக்கு பணியாற்றி வரும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் சேவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.



மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மகப்பேறு மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்தோர்க்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி  கிடைக்க தாமதம் ஏற்பட்டும் சூழல் நிலவியது. இந்நிலையில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் என்றாலே படத்திற்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர் களுக்கு பால் அபிஷேகம் செய்வதுதான் வழக்கம் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. அதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறையில் மருத்துவ சேவையை துவங்கியுள்ளனர். மயிலாடுதுறை  அரசு மருத்துவமனைக்கு  பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறு முடிந்து  தாய்,சேய்  இலவசமாக வீடுகளுக்கு திரும்ப செல்ல ஊரடங்கு நாட்களில்  இலவசமாக 2 கார்களை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தலைமை மருத்துவர் ராஜசேகரிடம்  இரண்டு கார்களையும்  ஒப்படைத்தனர். 



மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 30 கிலோமீட்டர் வரை இந்த இரண்டு கார்களை பயன்படுத்தி உடனடி மருத்துவ சேவை பெறுவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இரண்டு கார்களுக்கும்  விஜய் மக்கள் இயக்கத்தினரே ஓட்டுனர்களாக  இருந்து  இன்றிலிருந்து மருத்துவமனைக்கு உதவி புரிய துவங்கியுள்ளனர். 



இலவச கார் வசதியை பெற 9943021003 என்ற தொடர்பு என்னை பயன்படுத்திக்கொள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த மகத்தான மருத்துவ சேவையானது அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.