திரை உலகில் இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு தற்போது தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜய்யின் 47 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வரும் நிலையில், கரூர் மாவட்ட விஜய் மன்றத்தின் சார்பாக ரத்த தான முகாம், ஏழை எளிய தாய்மார்களுக்கு அன்னதானம் மற்றும் பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட சேவைகளை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.




 


இந்நிலையில் நடிகர் விஜய்  47 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக புதுவித கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் குளித்தலை ஒன்றிய தலைவர் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு அளித்த விஜய் ரசிகர்கள். வருடந்தோறும் நடிகர் விஜய் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடுவது வழக்கம்.



அதே போன்று இந்த வருடமும் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் ஒரு பகுதியாக ராஜேந்திரம் கிராமத்தில் வசித்து வரும் மணிமாறன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் இடது காலில் ஏற்பட்ட ரத்த அடைப்பின் காரணமாக அவரது இடது கால் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு விட்டது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வருமானம் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவத்திடம் இங்கு உள்ள நிலைமையை விளக்கி கூறியதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளியான மணிமாறனுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மளிகை, காய்கறி கடை வைத்து தர நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்தனர். 




இன்னிலையில் கடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்தவுடன் இதன் திறப்பு விழா தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடத்தலாம் என முடிவு செய்தனர்.  திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வி .பி. மதியழகன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜி.பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




கரூர் மாவட்ட குளித்தலை ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம், பொருளாளர் நிரேஷ்குமார், துணைத்தலைவர் வினோத், அமைப்பாளர் தளபதி தியாகு, துணை செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை ராஜேந்திரன் கிளை இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பாரத், ஸ்ரீ பாலு, சந்தோஷ்,மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கிராம மக்களும் கலந்து கொண்டு நடிகர் விஜய் வாழ்த்தியும், இது போன்ற நற்செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்களை பாராட்டியும் மகிழ்வித்தனர்.