திமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்த மிக முக்கியமான அரசியல் நகர்வு என்றால், அது மேகாலயா மற்றும் நாகலாந்தின் ஆளுநராக இருந்த ஆர். என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக மாற்றியது தான். அன்று முதல் தமிழ்நாடு அரசின் முகமாக உள்ள திமுகவிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையில் உரசல் ஆரம்பித்தது. ஆளுநர் தனக்கு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் திமுகவைச் சீண்டுவதைப் போல் பேசி வர, அதற்கு உடனடியாக திமுகவும் பதிலடி கொடுத்தது. இவற்றில் மிகவும் பரபரப்பை உண்டாக்கிய விவகாரம் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பது தான் சரி என அவர் கூறியதும், சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் தான்.

 

இந்த விவகாரங்களில்  முதலமைச்சரே நேரடியாக மிகவும் காட்டமாக பதில் அளித்தார். திமுக அரசில் அமைச்சர்கள் நடவடிக்கைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதும், முதலமைச்சர் மீது சுட்டிக்காட்டும் அளவிற்கான குற்றச்சாட்டு என்பது இல்லாமல் இருந்தது. வேங்கை வயல் விவகாரத்தினையும் அதிமுக சட்டமன்றத்துடன் நிறுத்திக்கொண்டது. திமுக அரசும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இல்லை.
  

 

ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம்

 

ஆனால் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு என்பது இன்று வரை முடிவடையவில்லை. ஆளுநருக்கு முதலமைச்சர் கொடுக்கும் பதிலடிகளை பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் கம்யூனிச சித்தாந்தவாதிகளைக் கடந்து பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றது. திமுக அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சி முடிவடைந்தயொட்டி, நடத்தப்பட்ட விழாக்களில் கூட  ”ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். திராவிடம் காலாவதியாகிவிடவில்லை. சனாதனத்தை காலாவதியாக்கியது தான் திராவிடம். வர்ணாசிரமத்தை, மனுநீதியை காலாவதியாக்கியது தான் திராவிடம். சாதியின் பெயரால் இழிவாக்கியதை காலாவதியாக்கியது தான் திராவிடம், பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதியாக்கியது தான் திராவிடம்”   என பேசினார். 

 

விடுதலை சிகப்பி மீது வழக்கு

 

அண்மையில் திரைப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த கவிதை இந்து மத கடவுளகளை மையப்படுத்தி கையால் மலம் அள்ளும் அவலநிலையையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் விளக்கும் வகையில் கவிதை ஒன்றை வாசித்தார். இந்த கவிதை முற்போக்குவாதிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த கவிதை இந்து மத கடவுள்களை இழிவு படுத்திவிட்டது என பாரத் இந்து அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ்  விடுதலை சிகப்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.



 

பேரறிஞர் அண்ணா மீதும் வழக்கு போடுவார்களா?

 

இதனால், திமுக அரசிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக வி.சி.க.வின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ராமனை வைத்து கவிதை எழுதியதற்காக வழக்கு பதிவு செய்வதென்றால் , ராமாயணத்தை விமர்சித்து ‘நீதிதேவன் மயக்கம்’ உள்ளிட்ட நாடகங்களை எழுதிய, ‘தீ பரவட்டும்’ முதலான உரைகளை நிகழ்த்திய பேரறிஞர் அண்ணா மீதும் வழக்கு போடுவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், சமூக செயல்பாட்டாளரான சுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூய்மைப் பணியை தெய்வப் பணி என்பதுதானே உங்கள் வாதம்..சில நாட்கள் உங்கள் தெய்வங்கள்தான் அந்த பணியை செய்துவிட்டு போகட்டுமே!” என குறிப்பிட்டுள்ளார்.

மலக்குழி மரணங்கள்:

 

இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இயக்குநர் பா. ரஞ்சித் “  இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி. இதை புரித்துக் கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.