தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு பின், நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. கொரோனா விடுமுறையால், வீடுகளில் இருந்த மாணவர்கள் மத்தியில் மன ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கல்லுாரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது, பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. 






விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் மொத்தம் 1,806 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில், 3 லட்சத்து 24 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்கீனமான முறையில் வகுப்பறைக்கு வருகின்றனர். மாணவர்கள் தங்களின் தலை முடிகளை வித்தியாச, வித்தியாசமாக வைத்துக்கொண்டும், சீருடையில் சட்டைகளை இடுப்பு அளவிற்கும், பேன்டுகளை டிசைனாகவும் தைத்து அணிந்து வருகின்றனர். மேலும், வகுப்பறைக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வரும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது. இவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களிடம் மரியாதைக்குறைவாக மாணவர்கள் நடந்துகொள்கின்றனர்.






இதனால், முகசுளிக்கும் ஆசிரியர்கள், “பள்ளிக்கு வந்தேமா, பாடம் நடத்தினோமா” என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டனர். மாணவர்களின் இந்த செயலில் பெற்றோர்களின் பங்கும் உள்ளது. தங்கள் பிள்ளையை சரியாக முடி திருத்தம் செய்யவும், சீருடைகள் சரியான அளவில் தைத்து அணிந்து செல்வதையும் பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும். இதேபோன்று, மொபைல் போன்களை பள்ளிக்கு எடுத்துச்செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.


மாணவர்களின் இந்த அட்டகாசத்தாலும், பெற்றோர்களின் அலட்சியப்போக்காலும் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ஒரே நாளில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர், மாணவி விடுதிகளில் ஆய்வு செய்தது


போன்று, அரசு பள்ளிகளிலும் குழு அமைத்து சோதனை செய்ய வேண்டும்.






அப்போது, ஒழுங்கீன மாணவர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து, பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்க வேண்டும். மேலும், வகுப்பறைக்கு எடுத்துவரும் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி செய்தால், மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள். எனவே, மாவட்ட அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்