மதுரை, சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருபாபிரியதர்ஷினி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 14 வயது வரை உள்ள குழந்தைகள் 37 கோடி பேர். இவர்களே வருங்கால இந்தியாவின் தூண்கள். சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிப்படைந்த குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவது தவறு என போக்ஸோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அந்த அடையாளங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் குற்றம் என சட்டம் உள்ளது.பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த செய்திகளில் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சரிவர பின்பற்றப்படுவதில்லை.
இதேபோல் சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், குழந்தைகள் தொடர்பான விவரங்கள், பாலியல் சம்பந்தமான விவரங்கள் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு சட்டங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்த சட்டங்களும் சரியாக பின்பற்றபடுவதில்லை.எனவே, இடைக்கால உத்தரவாக சமூக வலைதளங்களில் குறிப்பாக யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை நீக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது போன்ற விவரங்களை வைத்து பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அதோடு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தொடர்பான போக்சோ சட்டம், இந்திய பத்திரிகை கவுன்சில் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். செய்தித்தாள்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளை அடையாளங்கள் வெளிப்படுத்த படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சைபர் குழுவை உருவாக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வு பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக இது போன்ற செய்திகளை நாம் உடனடியாக அறிந்து கொள்ள ஊடகங்கள் உள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உதவிகள் கிடைத்து வருகின்றன
மேலும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் பெயர்கள் மாற்றம் செய்தும், அடையாளங்களை மறைத்தும் செய்திகள் வெளியிடுகின்றனர். செய்தியாளர்களும் மனிதர்கள்தான். இதுபோன்ற வழக்கில் பல்வேறு வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்குவதால் எந்த ஒரு பயனும் இல்லை, அதனை ஊடகத்துறையினர் கடைபிடிக்க வேண்டும் ஆனால் சிலர் முறையாக கடைபிடிப்பது இல்லை. வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிப்பது ஊடகத் துறையினரின் கடமை என கருத்து தெரிவித்து வழக்கு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.