சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தநிலையில், வருகின்ற 28 ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில், தான் நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், கலைஞர் ஒருவர்தான். 13 முறை எம்எல்ஏவாக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.திருவாரூரில் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்" என்று அறிவித்தார்.


இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தொடங்கியது. சுமார் 16 அடியில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சிலை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வருகின்ற 28ம் தேதி சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.


விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வெங்கய்யா நாயுடுவையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒருவேளை அவர் அறிவிக்கப்பட்டால், திமுகவும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளது.




சில நாட்களுக்கு முன்னதாக வெங்கய்யா நாயுடு சென்னை வந்த நிலையில், அவரை நேரில் போய் சந்தித்து பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போதே தன்னை குடியரசுத் தலைவராக நிறுத்தினால் ஆதரவளிக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.


அதே நேரத்தில் சென்னை வந்து ஆவடியில் தங்கியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலினோ மற்ற அமைச்சர்களோ சென்று வரவேற்காகததும், சந்திக்காததும் குறிப்பிடத்தக்கது.




இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாஜக ரீதியான கொள்கை பிடிப்பு கொண்டவராக இருந்தாலும், ஆரம்பம் முதலே கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் நல்ல பழக்கமும் இருந்தது. அதேபோல், கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித்துடன் சென்று நலம் விசாரித்தார். 


இந்தநிலையில், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வெங்கையா நாயுடு திறப்பது எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதே அளவிற்கு அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டால் திமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் முக்கியமாக பார்க்கப்படுகிறது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண