Gokulraj Caste Killing: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 


கோகுல்ராஜ் ஆணவக் கொலை(Gokulraj Honour Killing) மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்த விஷயத்தில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர். 


இந்த தீர்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் பேசியதாவது, ”இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். மிகவும் அன்பாக கனிவுடன் நடந்துகொள்ளக்கூடிய எனது மகனை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நன்றிகள். அதேபோல் இந்த வழக்கு நடத்திட உதவிய திருமாவளவன் அவர்களுக்கும் நன்றி. மேலும், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் இந்த வழக்கில் வாதாடி நீதியைப் பெற்றுத்தந்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கும் நன்றி” என கண்ணீர் மல்க பேசினார்.