சின்னத்திரையில், நடிகை ராதிகா நடித்த வாணி ராணி தொடரில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த வேணு அரவிந்த் அந்த தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான சிகிச்சை பெற்று, அதில் இருந்து மீண்டார்.
இந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு பிறகு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருக்கு மூளையில் கட்டி உருவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மூளையில் உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினார், இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்பு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியானது. இதையடுத்து, அவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வாணி ராணி தொடரில் அவருடன் நடித்த மற்றொரு நடிகரான அருண் குமார், நடிகர் வேணு அரவிந்த் குறித்து பல தவறான செய்திகள் பரவி வருவதாகவும், அவர் கோமாவால் பாதிக்கப்படவில்லை என்றும், அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையறிந்த சின்னத்திரை பிரபலங்கள அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். நடிகர் வேணு அரவிந்த் 1985ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான பகல் நிலவு படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். இதையடுத்து, கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம், சிவாஜி நடித்த படிக்காத பண்ணையார் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், தொலைக்காட்சி தொடரில் கவனம் செலுத்திய வேணு அரவிந்த் 1990ல் பொதிகையில் ஒளிபரப்பாகிய நிலாப்பெண் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பின்னர், அலையோசை, ராசிமூலம், ராகுல்வம்சம், காதல் பகடை, காசளவு நேசம், அக்னி சக்தி, அலைகள், இந்திரன் சந்திரன், ஜனணி, வாழ்க்கை, செல்வி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.