காரைக்காலில் போலீஸ் அதிரடி சோதனையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலை பச்சூர் தில்லை நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு போலியாக மதுபான ஆலை இயங்கி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீர வல்லபன், காரைக்கால் நகர காவல் ஆய்வாளர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்தது.  உடனே கதவை உடைத்து அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.




 


அங்கு பெட்டி பெட்டியாக 252 லிட்டர் போலி மதுபான பாட்டில்களும், கேன்களில் 1,100 லிட்டர் எரிசாராயமும், போலி மதுபான பாட்டில்களுக்கு பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள், லேபிள், தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை மூட்டைகளில் இருந்தன. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த குடோனை சோதனை செய்தபோது, போலி மதுபான பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு வேனும், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த போலி வாகன நம்பர் பிளேட்டுகளும் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கஞ்சா ‛செடி’ வளர்த்தால் தவறு என்பதால் ‛மரம்’ வளர்த்தாராம்... ! 2 பேரை கைது செய்த போலீசார்!




 


இதற்கிடையில் இந்த போலி மதுபான குடோனில் இருந்து வேனில் மதுபாட்டில்கள் காரைக்கால் அம்பாள் சத்திரம் அருகே கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வேனை சுற்றி வளைத்தனர். ஆனால் இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிரைவர், பாதி வழியிலேயே வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வேனை சோதனை செய்த போது அதில் ஆயிரக்கணக்கான போலி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், மதுபாட்டில்கள், வேன்களின் மொத்தம் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும்.


 




 


போலீசார் சோதனை நடத்த வருவதை எப்படியோ அறிந்துகொண்ட போலி மதுபான ஆலையில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுங்காட்டைச் சேர்ந்த சாராய வியாபாரி நிர்மல் நடராஜன் என்கிற அப்பு (வயது 45) மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். காரைக்காலில் போலி மதுபான ஆலையை போலீசார் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதயுள்ளது.


 


சூனியக்காரர் என நினைத்து இளைஞர் எரித்துக் கொலை; பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது!