யாரும் யாருக்கும் எதிரி இல்லை என கருணாநிதி சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 


சென்னை, ஓமந்தூரரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவரது சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :


வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம். 
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். 


அப்போது பேசிய அவர், “கலைஞர் கருணாநிதியின் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைஞரோடு பேசுவது எப்போதுமே மனதுக்கு இனிமையானது. இந்தியாவின் பண்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. வெளிநாடுகளுக்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன். 


வெவ்வேறு சித்தாந்தங்களில் கட்சிகள் கட்டமைக்கப்பட்டாலும் அவரவர் பாணியில் அவர்கள் மக்களுக்காகதான் பணியாற்றுகிறார்கள் என்பதை மறக்க கூடாது. அதனால் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை. நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. என் மொழிக்கு ஆதரவானவன். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு” எனத் தெரிவித்தார்.