முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று கருதப்பட்டு கடந்த 30 வருட காலமாக புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார்.
1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னை அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று கருதப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உற்பட 7 நபர்கள் கடந்த 30 வருட காலமாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து வருகின்றனர் . நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளன் கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் அவரை 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கடிதத்தை பரிசீலனை செய்த முதல்வர் மே மாதம் 16-ஆம் தேதி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கினார்.
அதனை தொடர்ந்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்தார் பேரறிவாளன் . இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு தனது வீட்டில் இருந்து பேட்டி அளித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ”இந்த கொரோனா பரவல் நெருக்கடியான காலகட்டத்திலும் என்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்னுடைய மகன் பேரறிவாளன் உடல்நிலை பாதிப்பை கருத்தில்கொண்டு 30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் ”என் மகனுடைய 30 ஆண்டுகாலப் சிறை போராட்டம் தொடர்ந்து கொண்டே உள்ளது அனைவருக்கும் தெரிந்த கதையே நோய் தொற்று காரணமாக என்னுடைய மகன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று என்னுடைய கோரிக்கையை ஏற்று முதல்வர் 30 நாள் பரோல் வழங்கியுள்ளார். மேலும் அவர் மருத்துவத்திற்காக அரசாங்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார் . அவருக்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார் .