நாகையை உள்ளடக்கிய தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும், ஹைட்ரோகார்பன் எடுக்க பல்வேறு கட்டங்களாக ஏலம் விட்டுள்ளது. இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதியை உள்ளடக்கிய தரை மற்றும் கடலோர பகுதிகளில்  ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது.




இவை அனைத்தும் கடலோர தரைப் பகுதி மற்றும், ஆழ் கடலற்ற  கடல் பகுதி ஆகும்.  இவற்றில் பணிகளைத் தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கடந்த 2019 ஆம் ஆண்டில்  விண்ணப்பித்து இருந்தது. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதுபோன்ற சுற்றுச்சூழல் அனுமதிகளை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனமானது, தான் ஏலம் எடுத்துள்ள பகுதிகளில் நாகை காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம் கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் 102 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க  அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடந்த 5ம் தேதி விண்ணப்பித்துள்ளது.




இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: வேதாந்தா நிறுவனம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, தான் ஏலம் எடுத்துள்ள தரைபகுதிகளை தவிர்த்துவிட்டு கடல் பகுதிக்கு மட்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதன் நோக்கம், எப்படியாவது கருத்து கேட்பு இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகம், பாண்டிச்சேரி உள்ளடக்கிய ஆழ்கடலற்ற  பகுதியில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு அனுமதி கொடுத்தால், ஷேல் எண்ணெய்  உள்ளடக்கிய  அனைத்தையும் ஹைட்ரோ பிராக்கிங்  முறை மூலமாகவே வெளிக்கொணர வாய்ப்புள்ளது. இதனால், கடலில் உள்ள மீன் வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.


எனவே தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தீவிர பரிசீலனை செய்து நிராகரித்ததை போன்று வேதாந்தா நிறுவனத்தின்  விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து புதிய எண்ணெய் கிணறு உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் அனுமதி கிடையாது என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் வேதாந்தா நிறுவனம் தற்போது அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பது விவசாயிகளை பாதிக்கக்கூடிய செயலில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடுகிறது ஆகவே அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உடனடியாக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.