200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக எம்.பி கனிமொழி தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தி.மு.க மாநிலஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டமானது, திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமானகீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் , திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியும் கலந்து கொண்டு, தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குநலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இநிகழ்வில் கனிமொழி பேசியதாவது, “ இந்த தேர்தலில் வெற்றி என்பது உங்களின் கரங்களில் இருக்கிறது. அந்த கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுக தலைவரும், தமிழ்நாடுமுதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வது போல் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக, நானும் இறுமாப்போடுசொல்கிறேன் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.
நேற்றைய தினம் அம்பேத்கர் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்று, திமுகவை தாக்கி பேசியிருந்திருந்தார். விஜய் பேசியிருந்ததாவது , “மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026இல் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என பேசியிருந்தார்.
இந்நிலையில், விஜய் பேச்சானது திமுகவினரை சற்று, உற்றுநோக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்த தருணத்தில், விஜய் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.