சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறநிலையத்துறை கோயில்களில் அனைவரும் வழிபாட்டு உரிமையை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “திரௌபதி அம்மன் கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என ஆதிதிராவிட மாணவர்களை சக மாணவர்கள் தாக்கி இருக்கிறார்கள். மேல்பாதியில் இளைய தலைமுறையினரிடம் சாதிவெறி தூண்டி விடப்பட்டிருக்கிறது.


சட்டம் வலியவனை கண்டால் வளைந்து கொடுக்கிறது, எளியவனை கண்டால் எட்டி உதைக்கிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் நுழைய தலித்துகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா?


தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தலித் குடிசைகளுக்குள் நுழைந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் ஆனால் ஊர் தெருக்களில் அப்படி நடந்தது இல்லை. அதிகாரிகள் நேர்மைத்திறமாக இருந்திருந்தால் தாக்கியவர்களை கைது செய்திருக்க வேண்டாமா? காவல்துறையினரிடையே தலித் விரோத போக்கு நிலவுகிறது


மேல்பாதி கிராமத்தில் ஒருவன் சென்று பேசியிருக்கிறான் ...சட்டம் படித்தவன் மக்களிடையே வன்மத்தை விதைத்து பேசுகிறான், உச்ச நீதிமன்றம் சென்றாலும் விடமாட்டோம் என்று வண்மமாக பேசுகிறான் இதுதான் அவனது சாதி புத்தி. இப்போது கோவிலை இழுத்து பூட்டி விட்டார்களே இப்பொழுது எங்கே செல்வாய் நீ?


தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து வருகின்ற அரிசியை உண்ணாமல் இருக்கிறானா? தாழ்த்தப்பட்டவன் துவைக்கின்ற துணியை நீ உடுத்தாமல் இருக்கிறாயா? ஒடுக்கப்பட்டவன் கால் படாமல் மிதிபடாமல் எந்த சாமியும் உருவானது  இல்லை.  அதிகாரத்தை நோக்கி உரிமையை கேட்கும் இடத்தில் தான் அவன் சாதி பார்க்கிறான்


இந்தியா முழுவதும் ஒரு நாள் காவல்துறையினரை ஒதுக்கி வைத்து விட்டால் சாதியை ஒழித்து விடலாம். ஓ பி சி மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள். மேல்பாதியில் சம்பவத்திற்கு சம்பந்தமில்லாமல் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவன் தாக்கப்படுகிறான் அவன் மீதே வழக்கு பதிவு செய்து கைதும் செய்யவும் படுகிறான், இது எப்படி சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியும். இதுதான் சாதியவாத போலீஸ் புத்தி. இந்தியா முழுவதும் இந்த நிலைதான்


சாதி தீண்டாமையை எதிர்ப்பவர்கள் ஆளும் தமிழ்நாட்டிலேயே காவல்துறையினர் இப்படி செயல்படுகிறார்கள் என்றால் சாதி தீண்டாமை புத்தியைக் கொண்ட பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று எண்ணி பாருங்கள். இந்துக்கள் என்ற போர்வையை சாதி அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது. வன்னியர்களுக்கு யார் எதிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியா? பாரதிய ஜனதா கட்சியா?


வன்னியர்களுக்கு எதிரி தலித் இயக்கங்களா அல்லது ஆர்எஸ்எஸ் சங்கிகளா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்வானியை எதிர்த்து போராட வேண்டியவர்கள் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறார்கள். காவல்துறையினர் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சாதிய பிரச்சனைகள் ஒழிந்து விடும். ஆனால் அதிகாரிகளுக்கான சாதி  புத்தியால்தான் இது போன்ற பிரச்சனைகள் தீவிரமடைகிறது


காவல்துறையினர் சட்டத்தை அமல்படுத்தினால் பிரச்சனை வராது என்பதற்கு திருவண்ணாமலை மாவட்டம் திருமுடிவாக்கம் கோவில் பிரச்சினை ஒரு உதாரணம். அதிகார வர்க்கத்தினர் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போதும், சமூகநீதியையும் சமத்துவத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கொள்கை சார்ந்து சிந்தித்தால்  அமித் ஷா விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் வந்து இணைந்து கொள்வார்


21 ம் நூற்றாண்டில் குழந்தை திருமணத்தை ஒருவர் நியாயப்படுத்தி பேசுகிறார், அறிவியல் பூர்வமாக எவ்வளவு பெரிய பிழை அது?  படித்து என்ன பயன். அப்படி சிந்திக்கும் ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கிறார் என்றால் மனுஸ்மிருதி எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் நம்மை 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து செல்கின்றனர்


தமிழ்நாடு அரசியலில் இப்போது காரைக்குடி பைத்தியம் ஒன்று திரிகிறது. பைத்தியம் முற்றி போய் பைத்தியத்திலேயே ராஜாவாக பைத்தியக்கார ராஜாவாக திகழ்கிறார்.(ஹெச்.ராஜா)


மேல்பாதி மக்களை சந்திப்பதற்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினரிடம் ஒன்றை சொல்லி அனுப்புகிறார் உயர்நீதிமன்ற வழக்கறி பாலுவிடம் வேறு ஒன்றை சொல்லி அனுப்புகிறார் ராமதாஸ். தன் சொந்தக் கட்சி தொண்டர்களையே மோதலுக்கு உண்டாக்குகிறார்.


இதுபோல தவறாக வழிநடத்தக்கூடிய தலைவர்களை ஓபிசி மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் அதுதான் அவர்களுக்கு உதவும். எனவே தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நாங்கள் கொடுக்கக்கூடிய வேண்டுகோள் சமூக நீதி மேல் நம்பிக்கை உள்ள அரசு திமுக என்பதால் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தை முழுமையாக அமல்ப்படுத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.


சட்டம் அனைவரையும் சமம் என்று கூறுகிறது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை தருகிறது.


இந்து சமய அறநிலைத்துறை சட்டவிதிகளின்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 43,283 கோயில்களுக்கும் அறங்காவலர் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் தற்போது 780 கோயில்களில் மட்டும் தான் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் விடுக்கின்ற கோரிக்கைகள்: 



  • சட்டத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்துங்கள், சட்டம் அனைவருக்கும் சமமானது

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரும் சாதியற்றவர்களாக செல்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் அதனை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்

  • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழுவில் ஆதிதிராவிடர் ஒருவரையும் பெண் ஒருவரையும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்

  • தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்கள் அனைத்திலும் வழிபாட்டு சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கை கேட்டு பெற்று அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்

  • எந்தவித பாகுபாடும் இன்றி பிரசாதங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் அதனை மீறி செயல்படும் பூசாரிகள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்


இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில் பூசாரிகளின் நலனுக்காக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அந்த பூசாரிகளும் ஓய்வூதியம் பெரும் தகுதி பெறுவதை தமிழ்நாடு அரசு  உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.