விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் எந்த சக்தியுடனும் இணைவோம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
அதிமுகவிற்கு அழைப்பு:
கள்ளக்குறிச்சியில் வி.சி.க. மகளிரணி சார்பில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள விசிக மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில், “மக்கள் பிரச்சினைகளுக்காக மதவாத, சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளுடனும் இணைவோம். மக்கள் பிரச்சினைகளுக்காக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த விருப்பம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வர வேண்டும். குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடில் உள்ள கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டும். சாதிய போதை மதுபோதையை விட மோசமானது. மத போதை போதைப்பொருளை விட மோசமானது. தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க.வை இதைப்பற்றி சொல்கிறார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க.வின் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது. அவர்களின் கூட்டணியிலே கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க., - அ.தி.மு.க. என்ற போக்கே பல காலமாக நிலவி வரும் சூழலில், தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருப்பதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சிக்கும் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் படலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.விற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் பங்கேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.