2023-ஆம் ஆண்டுக்கான விசிக விருது பெறுபவர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

Continues below advertisement


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:


”2007 முதல் விசிக சார்பில் சமூகம் அரசியல் கலை இலக்கியம் போன்ற பல்வேறு தலைப்புகள் பணியாற்றி சிறந்து விளங்குபவர்களுக்கு தேர்வு செய்து விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய அளவில் ஆண்டுதோறும்  பல்வேறு சான்றோர்க்கு விருதுகள் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு முதல் மார்க்ஸ் மாமணி விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023 ஆண்டிற்கான விசிக - விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது வி.சி.க.


அம்பேத்கர் சுடர் விருது - சி.பி.ஐ (எம் எல்) பொது செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா - வுக்கு  வழங்கப்பட உள்ளது.


பெரியார் ஒளி விருது  - து. ராஜா தேசிய பொதுச்செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 


காமராசர் கதிர் விருது - மு.அப்பாவு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவருக்கு வழங்கப்பட உள்ளது.


அயோத்திதாசர் ஆதவன் விருது- ராஜேந்திரபால் கௌதம் மேனாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


காயிதேமில்லத் பிறை விருது -முனைவர் மோகன் கோபால், மேனாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூரு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


செம்மொழி ஞாயிறு விருது- திருமதி தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


மார்க்ஸ் மாமணி விருது - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்) அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


விருது வழங்கும் விழா  மே 28 மாலை 5 மணிக்கு, சென்னையில் நடைபெறும்.  எந்த இடம் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.17- வது ஆண்டாக இந்த விருதுகளை விசிக வழங்கி வருகிறது.


காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகத்தில் 3 நாள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டேன். ஜனநாயக சக்திகளை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என நான் பரப்புரை செய்தேன். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60% வாக்குகளை பெற்றுள்ளது என கருத்துக்கணிப்பு வருகிறது. வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகிறது. கருத்துக்கணிப்புகள் மெய்பட  வேண்டும், சனாதன சக்திகளை கர்நாடக மண்ணிலிருந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன். எதிர்பார்க்கிறேன். அகில இந்திய அளவில் வெறுப்பு அரசியலை தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காகவே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.


மணிப்பூரில் மதவெறி கும்பல் திட்டமிட்டு வன்முறையை நடத்தி வருகின்றனர். மணிப்பூர் கலவரத்திற்கு முழுக்க முழுக்க பாரதிய ஜனதாவின் வெறுப்பு அரசியல் தான் காரணம்.  பழங்குடி மக்களை குறி வைத்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னையில் 15-ம் தேதி காலை விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 


மாநில உயர்நிலைக் கல்விக் குழுவின் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராக இருந்து விலகிய ஜவகர் நேசன் விலகி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.அவர் சொல்லியிருக்கிற காரணம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மாநிலத்தின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணக்கமானதாக அல்லது இணைந்து போகக் கூடியதாக அமையுமே ஆனால் மாநில அரசின் நோக்கம் நிறைவேறாது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது. எனவே முதலமைச்சர், ஜவகர் நேசன் அவர்கள் முன் வைத்திருக்கக்கூடிய குற்றச்சாட்டு என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தீவிரமாக கவனத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


கேரளா ஸ்டோரி என்ற வெறுப்பு அரசியல் படத்தை எடுத்து விடுகிறார்கள்.  ஒப்பீட்டு அளவில் பெண்களுக்கு எதிராக குஜராத்தில் நடந்ததை போல  கேரளாவில் நடக்கவில்லை என்பதுதான் தெரிய வருகிறது. குஜராத் பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மத்திய அரசு  குஜராத்தில் இப்படி காணாமல் போகும் பெண்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு விசாரணை ஆணையம் ஒன்றை அல்லது சிபிஐ விசாரணைக்கு ஆணை இடக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது, இதிலிருந்து ராகுல் காந்திக்கு அவர்கள் எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்கள் என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் அந்த நீதிபதி ஒரு சார்பாக ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றமே உணர்ந்திருப்பதாக தெரிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவது மிக மிக  ஆபத்தானது, நாட்டிற்கு நல்லதல்ல.” இவ்வாறு அவர் பேசினார்.