கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை நீக்க அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ திருமாவளவன் வெளியிடுவார் என விசிக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக அழுத்தம் கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஆதவ் அர்ஜுனாவை நீக்க திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு குடைச்சல் கொடுத்த ஆதவ் அர்ஜுனா:
விசிகவில் இந்தாண்டின் தொடக்கத்தில் இணைந்தவர்தான் ஆதவ் அர்ஜுனா. புதிதாக கட்சிக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு எடுத்த எடுப்பிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி, அனைத்து மேடைகளிலும் இடம், அனைத்து முடிவுகளையும் அவரிடம் ஆலோசித்து எடுப்பது என்று அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்தார் திருமாவளவன்.
கடந்த சில மாதங்களாகவே, கூட்டணியில் இருக்கக் கூடிய திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆதவ் அர்ஜுனா மீது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளே அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் விஜய்யை வைத்துக் கொண்டே திமுகவை அட்டாக் செய்து பேசினார் ஆதவ் அர்ஜூனா.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, "அண்ணன் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால், அவர் மனசாட்சி இங்குதான் இருக்கிறது. 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது.
சாட்டையை சுழற்றிய திருமா:
தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றால் கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள்" என்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதேபோன்ற கருத்தைதான் விஜயும் பேசினார். இதற்கு, திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே, ஆதவ் அர்ஜுனா மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என கூறி திமுகவை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தினார் ஆதவ் அர்ஜுனா.
இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என விசிகவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமா உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருமாவே வெளியிடுவார் என விசிக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?