தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களில் வன்னிய சமூகமும் ஒன்று. வன்னியர் சங்கத்தினருக்கு வட தமிழகத்தில் பல பகுதிகளில் கிளைகள் உள்ளது. திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள கூட்டு சாலையில் வன்னியர் சங்கத்தினர் அவர்களது சின்னமாக கருதும் அக்னி கலசத்தை வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த அக்னி கலசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு, வன்னிய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, திருவண்ணாமலை நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் வன்னியர்சங்கத்தினர் திரளாக நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் வன்னியர் சங்கத்தினருடன், பா.ம.க.வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் உடனடியாக அக்னி கலசத்தை மீண்டும் இருந்த இடத்திலே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்ற வன்னியர் சங்க மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், “ அனைத்து மக்களும் அமைதியாக வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், இங்கே இருந்த அக்னி கலசத்தை இரவோடு இரவாக எடுத்துச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் எத்தனையோ திருட்டும் நடக்கிறது. அதில், அந்த அக்னி கலச திருட்டும் ஒன்று. மாவட்ட வருவாய் அதிகாரிகள் அக்னி கலசம் ஏற்கனவே இருந்த இடத்திலே வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
திடீரென அக்னி கலசம் அகற்றப்பட்டதால் முக்கிய சாலைகளில் பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். கடந்தாண்டு ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டரில் வன்னியர் சங்கத்தின் பெயரும், அக்னி கலசமும் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால். அமேசான் ஓடிடி தளத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் வன்னியர் சங்கமும், பா.ம.க.வினரும் கண்டனங்களை தெரிவித்தனர். பின்னர், அந்த காலண்டரில் வன்னியர் சங்கம் படம் அகற்றப்பட்டு, லட்சுமி படம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
மேலும் படிக்க : Tamil news | கோயிலில் கொள்ளையடித்தவர் சிக்கினர்...முல்லைப் பெரியாறு நிலவரம்... செல்லூர் ராஜூ டாக் - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்