Vande Bharat Rail : நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முக்கிய இடத்திற்கு மிக விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.


டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதுபோன்று நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தாண்டு  இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.


தமிழ்நாட்டில் எத்தனை ரயில்?


தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே சென்னை - பெங்களூர்- மைசூர் மற்றும் சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை - திருப்பதி ரூட்டிலும் வந்தே பாரத் ரயில் வரவுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை ஜூலை 7ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து நடைபாதை வழியாகவே அல்லது  பேருந்திலோ திருமலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு வந்தே பாரத் ரயில் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். 


மேலும், தமிழ்நாட்டில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இயங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனுடன், கோரக்பூரில் இருந்து லக்னோ, ஜோத்பூரில் இருந்து சபர்மதி ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.




மேலும் படிக்க 


Dhanush in Tirupathi: யாருப்பா இது...? திருப்பதியில் சாமி தரிசனம்! மொட்டையுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் தனுஷ்!