பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 2021 மே 7-ம் தேதி, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று பேசவும், எழுதவும் அழைக்கத் தொடங்கினார். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும்,  'ஒன்றிய அரசு' என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். 


இது குறித்து நான் சட்டப் பேரவையிலும் கேள்வி எழுப்பினேன். மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று சொல்வதில் பா.ஜ.கவு.க்கு எந்த பிரச்சினையும் இல்லை. 'ரோஜா மலரை' எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது ஒரு 'ரோஜா மலர்' தான். மத்திய அரசை, எந்தப் பெயரில் அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறையப் போவதில்லை. ஆனால், திடீரென 'ஒன்றிய அரசு' என்று சொல்வதற்கு பின்னால், மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது என்பது தமிழக மக்கள் நன்கறிவார்கள்.


இந்தியா என்கிற நாடு, மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒன்றியம் என்பது போல், முதலமைச்சரும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர். 1947-ல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த போது, இப்போதிருக்கும் மாநிலங்கள் இல்லை. இந்தியா என்ற நாடு உருவான பிறகே, நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு, ஒரு மொழி பேசும் மாநிலங்கள் கூட நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டன. கடைசியாக, தெலுங்கு மொழி பேசும் ஆந்திரப்பிரதேசம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. மாநில அரசு, மாவட்டங்களை பிரிப்பதுபோல தான், மத்திய மாநிலங்களைப் பிரித்து வருகிறது.




தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் 'ஒன்றிய அரசு', என்ற சொல்லாடலை, பாடப் புத்தகங்களிலும் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றி, தவறாக பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது என்பது, அவர்களின் மனதைக் கெடுக்கும் செயல். தி.மு.க.வினர் தங்களின் அரசியல் விளையாட்டை, அரசியலோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இந்த நாட்டின் உண்மையான வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் அதனை, காவி மயம் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்தியா மீது படையெடுத்து, இங்குள்ள கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி, பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த, அன்னிய படையெடுப்பாளர்களை புகழ்ந்துரைக்கும் பாடத்திட்டங்களை நீக்கும் போது கூட, அதனை காவி மயம் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், தங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றையெல்லாம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியே, பள்ளிப் பாடபுத்தகங்களில், 'மத்திய அரசு' என்பதற்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்று திருத்தம் செய்வது தி.மு.க.வின் அரசியல் அதிகார ஆணவத்தையே காட்டுகிறது. 


தி.மு.க. அரசாக, தி.மு.க.வின் பிரிவினை சித்தாந்தத்தை  ஏற்றுக் கொண்டவர்களுக்கான அரசாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார்.