திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட எச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.  அப்போது அங்கிருந்தவர்கள் எச்.ராஜாவிற்கு சர்க்கரை குறைந்திருக்குமோ என்ற அச்சத்தில் சர்க்கரை கொடுத்தார்கள். ஆனாலும் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அப்போது ஸ்கேன் சோதனையில் எச்.ராஜா உடல் நிலை மோசமாக இருப்பது தெரியவந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் எச்.ராஜா இருந்து வருகிறார். 

ஐசியூவில் எச்.ராஜா

இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எச்.ராஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று எச்.ராஜா உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் எச்.ராஜாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாகவும் விசாரித்தார்.

எச்.ராஜா உடல்நிலை முன்னேற்றம்

இந்த நிலையில் இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று எச்.ராஜாவை சந்தித்து உடல்நிலை கேட்டறிந்தார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்ட சமூகவலைதளபதிவில், இன்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.அவர் விரைவாக உடல் நலம் தேறி வருகிறார்.

மீண்டும் களத்திற்குத் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டி, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.  இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் எச்.ராஜாவின் புகைப்படத்தையும் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், எச்.ராஜா உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.