TN Rare Earth Minerals: தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும், அரிய வகை கனிம வளங்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிய வகை கனிம வளங்களுக்கான வழித்தடம்:
ஆற்றல் தொடங்கி ஆட்டோமொபைல் துறை வரையிலும், கனிம வளங்களின் பங்கு என்பது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. ஆனால், இவற்றை சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்தே, உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும், அரிய வகை கனிம வளங்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளை சார்ந்து இருப்பது குறைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துகோலாக அமையும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேநேரம், அடிப்படையில் இந்த திட்டம் நல்லதா? கெட்டதா? தமிழ்நாட்டில் எப்படி என்னென்ன அரிய வகை கனிம வளங்கள் இருக்கின்றன? என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரிய வகை கனிம வளங்கள்:
மத்திய அரசு திட்டமிட்டுள்ள வழித்தடமானது மோனசைட், பாஸ்னசைட், ஜெனோடைம், இல்மனைட் மற்றும் சிர்கான் போன்ற கனிமங்களில் கவனம் செலுத்தும். காரணம் இவற்றின் தான் நியோடைமியம், பிரசோடைமியம், டிஸ்ப்ரோசியம் மற்றும் டெர்பியம் உள்ளிட்ட அரிய வகை கனிம வளங்கள் காணப்படுகின்றன. இவை மின்சார வாகன மோட்டார்கள், காற்றாலை டர்பைன்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சென்சார்கள் மற்றும் ஆக்ட்சுவேட்டர்களில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்களை உற்பத்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில், இந்த கனிமங்களானது பெரும்பாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் மோனசைட் நிறைந்த கடற்கரை மணலில் காணப்படுகின்றன, மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில பகுதிகளில் இவற்றின் இருப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரிய வகை கனிம வளங்கள் வழித்தடம் - திட்டத்தின் பலன்கள்
புதிய அரிய வகை கனிம வளங்கள் வழித்தடமானது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கானதாக மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களால், சுரங்கம் அமைக்கப்படும் பகுதியை சுற்றிய உட்கட்டமைப்புகளும் வளர்ச்சி காணக்கூடும். மேலும், இந்த வழித்தடமானது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, புவிசார் அரசியலிலும் இந்தியாவை வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.
அரிய வகை கனிம வளங்கள் வழித்தடம் - ஆபத்து?
இதனிடையே, மோனோசைட் கனிமத்தில் உள்ள கதிரியக்கம் ஆபத்தானது என்பதால், அதனை பிரித்தெடுப்பதில் பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என துறைசார் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். கனிமவளங்களுக்கான அமைக்கப்படும் சுரங்கங்களானது கடலோர சுற்றுச் சூழல் அமைப்புகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிலத்தடி அமைப்புகளை பாதிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கின்றனர்.
உலகளவில் அரிய வகை கனிம வளங்களுக்கான சுரங்கமானது நிலத்தடி நீர் மாசுபாடு,மண் சீரழிவு மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகியவற்றிற்கு வழிவகுப்பதாக பல ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சுரங்கங்கள் வேதியியல் ரீதியாக தீவிரமானது என்பதால் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கப்படாவிட்டால், பல தசாப்தங்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் கழிவுகளை உருவாக்கக் கூடும். பெரிய அளவிலான சுரங்கங்கள் ஏற்கனவே பலவீனமாக உள்ள கடலோர அமைப்புகளை மேலும் பாதிக்கக்கூடும் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் வாழ்வாதாரங்களை, குறிப்பாக மீன்பிடி சமூகங்களை அச்சுறுத்தக் கூடும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்
கனிம சுரங்கங்கள் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மீளமுடியாத சேதத்தைத் தடுக்க வலுவான பாதுகாப்புகள் மற்றும் வெளிப்படையான கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக கடுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், கதிர்வீச்சு பாதுகாப்பு நெறிமுறைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் நீண்டகால கண்காணிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
