பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகள் குறித்து யாரும் பேசிவிட, எழுதிவிடக் கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை எல்லாம் திமுக அரசு செய்து வருகிறது.


ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமை பற்றியெல்லாம் திமுகவினர் மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், 'இம்' என்றால் சிறைவாசம். 'ஏன்?' என்றால் வனவாசம் தான். பேசுவதற்கு, எழுதுவதற்கு, சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில் தான் இருக்க வேண்டும்.


பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம் மூலம், தமிழ் பதிப்பக துறையில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர். கணிதத்தில் நிபுணரான அவர், கணிதம் தொடர்பாக தமிழில் பல புத்தகங்களை எழுதி இருப்பவர். சமூகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக துணிச்சலுடன் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர். திமுகவுக்கு மாற்றான சிந்தனைகளை முன் வைக்கிறார். திமுக அரசின் தவறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் என்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது அப்பட்டமான அடக்குமுறை. ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை. அடக்குமுறை மூலம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கி விடலாம் என்று நினைப்பது நடக்கவே நடக்காது. இது தொழில் நுட்ப யுகம். ஒவ்வொரு நொடியும் நடக்கும் உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டே இருக்கிறார்கள். பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, பாசிச நடவடிக்கைகளை கைவிட்டு பத்ரி சேஷாத்ரி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்ரி சேஷாத்ரி மணிப்பூர் கலவரம் தொடர்பாக சர்ச்சையாக பேசியதும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து கடுமையாக விமர்சித்திருந்ததும் கைதுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. பத்ரி சேஷாத்ரி மீது மூன்று சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண