பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இதனால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பல லட்சம் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. வளர்ந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைகள் தான். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், தாராளமாக மது கிடைப்பதால் மாணவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கும் என்பது, யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 


ஏற்கனவே நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் மதுபான பார்கள் செயல்படுகின்றன. இதனாலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதோடு பல நேரங்களில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் உருவாகிறது. இந்நிலையில், 1981-ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திமுக அரசு திருத்தம் கொண்டு வந்திருப்பதாகாவும், அதன்படி, திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்களில் மதுபானங்கள் விநியோகம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.


திருமணம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளும், வாழ்வில் நடக்கும் மகிழ்வான தருணங்களில் நண்பர்கள் உறவினர்களுக்காக நடத்தப்படும் விருந்துகளும், உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து கலந்துரையாடவும், உறவையும், நட்பையும் பலப்படுத்தவும், புதுப்பிக்கவும் வாய்ப்பாக அமைகின்றன. இந்நிகழ்வுகளில் சம வயதுடையவர்கள் மட்டும் கலந்து கொள்வதில்லை. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று அனைவரும் கலந்து கொள்வார்கள். இது போன்ற நிகழ்வுகளில் மதுபானங்களை அனுமதித்தால், அது சண்டை, சச்சரவில்தான் முடியும். சில நேரங்களில் பெரும் கலவரமாகக் கூட மாறிவிடும் அபாயம் இருக்கிறது. காலப்போக்கில் ஒரு பிறந்தநாள் விருந்து நடத்த வேண்டுமானால் கூட காவல்துறையில் அனுமதி கேட்டு, காவலர்கள் பாதுகாப்புக்கு வர வேண்டிய சூழலும் உருவாகலாம். திருமணத்திற்கு மண்டபம் பிடிப்பதற்கு முன்பே, காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய நிலையும் வரலாம். இதனால் காவல்துறைக்கும் கூடுதல் சுமை ஏற்படும்.


இன்று பெரும்பாலானவர்கள் சொந்தமாக நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். பெரும்பாலும் தாங்களே வாகனங்களை ஓட்டுகின்றனர். விருந்துகளில் மதுபானங்களை அனுமதித்தால், மது குடித்துவிட்டு தான் வாகனங்களை ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் விபத்துகளும் அதிகரிக்கும். விருந்துக்கு குடும்பத்துடன் வரும் ஒருவர் மது அருந்தினால், அதனால், அவரது மனைவி, குழந்தைகள் அவமானங்களை சந்திக்கவும், விபத்துகளில் சிக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் குடும்பங்கள் சீரழியும். மோசமான சமுதாய சீரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்புகளும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற அனுமதிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண