பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?


மதச்சார்பின்மை, நாத்திகவாதம் பேசும் தி.மு.க.வுக்கு இந்து ஆலயங்கள் மீது மட்டும் எப்போதும் வெறுப்புணர்வு உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்து ஆலயங்களில், பிரச்சினைகளை உருவாக்குவது வாடிக்கையாகி வருகிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த தமிழகம் ஓர் ஆன்மிக பூமி. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன.


என்னதான், இந்து வெறுப்பை கக்கினாலும், தமிழகத்தின் அடையாளமாக இன்றளவும் இருப்பது, சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் கட்டிய பிரம்மாண்ட கோயில்கள்தான். கோயில்கள் இல்லாமல் தமிழகம் இல்லை. தமிழகத்தின் கலாசாரம், பண்பாடும் இல்லை. எனவே, தமிழகத்தை தொடர்ந்து தங்களின் பிடியில் வைத்திருக்க, கோயில்களின் பாரம்பரியத்தை சிதைக்கும் வேலைகளில், இறை நம்பிக்கையற்ற தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.


இந்து கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் வழிபாட்டு முறை, நிர்வாக முறை என அனைத்திலும் வேறுபாடு உண்டு. அதுபோல, சைவர்களுக்கு மிக முக்கியமான ஆலயமான சிதம்பரத்தில் உள்ள தில்லை ஸ்ரீநடராஜர் ஆலயம், மிகப்பழமையான பாரம்பரியம் மிக்கது. சில ஆயிரம் பேர் மட்டுமே உள்ள, தில்லைவாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இந்த ஆலயத்தை நிர்வகித்து வருகின்றனர்.


கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் தேவையில்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, ஸ்ரீநடராஜர் ஆலயத்தை மதச்சார்பற்ற அரசு எடுத்துக் கொண்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி, தீட்சிதர்கள் தங்களது உரிமையை மீட்டெடுத்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீநடராஜர் ஆலயத்தை கைப்பற்ற, இறை நம்பிக்கையற்ற தி.மு.க. அரசு, அறத்திற்கு புறம்பான வழிகளில் முயற்சிகளை செய்து வருகிறது. ஸ்ரீநடராஜர் ஆலயம் இப்போது, மதச்சார்பற்ற தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. தங்கள் நிர்வாகத்தில் இல்லாத கோயிலில், ஆய்வு நடத்த, குழுவை அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்? ஸ்ரீநடராஜர் கோயில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடையில்லை. ஆனால், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில், நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது, சிவ பக்தர்களின் மனதை, இந்துக்களின் மனதை, புண்படுத்தும் செயல்.


தி.மு.க.வின் இந்து வெறுப்பு கொள்கையை பரப்பக்கூடிய, யூ-டியூப் சேனலில், ஸ்ரீநடராஜரை இழிவுபடுத்தி பேசிய நபர் மீது நடவடிக்கை கோரி, ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும், அந்த யூ-டியூப் சேனல் மீதும், ஸ்ரீநடராஜரை இழிவுபடுத்தியவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஸ்ரீநடராஜர் கோயில் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் ஆதிகுடியான தில்லை தீட்சிதர்கள் மீது தி.மு.க. அரசு வன்மத்தை காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது.


மதச்சார்பற்ற அரசு மத விவகாரங்களில், கோயில் வழிபாட்டு உரிமைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் பூஜை செய்வதோடு, தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்வது நல்லது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினையில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், தி.மு.க.வினருக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்குவார் என நம்புகிறேன்.


ஸ்ரீநடராஜர் கோயில் வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதுபோல, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வரவு - செலவு கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். ஒவ்வொரு கோயிலின் வரவு - செலவு கணக்குகளை அந்தந்த கோயில்களில், விளம்பரப்படுத்துவடன் இணையத்திலும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.