அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.


பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான. இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.


கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. இந்த சூழலில் நேரடி செமஸ்டர் தேர்வுகள் தற்போது தொடங்க உள்ளன. 


அதேபோல பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் நிலையில், பொதுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்குகிறது.


இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இதுகுறித்து மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட போலி இ-மெயில் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் பகிர்ந்துள்ளது. அந்த இ-மெயிலில் ஜூன் 20ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாணவர் ரூ.5,000 முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ-மெயிலை அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கைப் பிரிவு அனுப்பியுள்ளதாக நம்பும் வகையில், போலிப் பெயரில் இ-மெயில் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு http://annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண