'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்”

Continues below advertisement

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்கப்படுவது கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Continues below advertisement

கடும் நடவடிக்கை

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் அந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு சுற்றியுள்ள மாவட்டங்களில் விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கும் மட்டும் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பால்தான் கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்படுவதாக மக்கள் சொல்கிறார்கள். எனவே, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியினர், காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முற்றிலும் ஒழிக்க வேண்டும்

கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்த பிறகும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் உண்மையை மறைத்து திசைதிருப்ப முயன்றுள்ளனர். உண்மை அம்பலமாகி விட்டதால் வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. கள்ளக்குறிச்சியில் பலர் உயிரிழக்க காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில்  அடுத்தடுத்து 29 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவியேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

மேலும் படிக்க : MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்

 

Continues below advertisement