கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.


இந்நிலையில், இந்த இறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். 



முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவண் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கூண்டோடு பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக எம்.எஸ்.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ள சாராயத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடம் நடத்திய பரிசோதனையில் அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நடந்தது என்ன?


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில்  அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். 


இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவியேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அரசு வழங்க வேண்டும் என அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.