அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம்,  2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும், அதேசமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி. வேலுமணி மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது.


குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், எஸ்.பி. வேலுமணி மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரச்சாரத்தின் போது பேசி வந்தார்கள்.


அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கூட திமுக பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு எஸ்.பி.வேலுமணி தான் மிக முக்கிய காரணம். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.


தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது இதை வைத்துக் கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்கின்ற இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பவர் எஸ்.பி. வேலுமணி என்கிற காரணத்தினால், அவரை மனரீதியாக உறுதியை குலைப்பதற்காகவும், அவருக்கு தொடர்புடைய இடங்களை எல்லாம் சோதனை செய்வதன் வாயிலாக அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இந்த நடவடிக்கையை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.