தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் “வலிமை”யை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார். 


தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (பான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 'டான்செம் நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90.000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் "அரசு” சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் "வலிமை* சிமெண்ட் முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெடன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்-ன் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 



 


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது.


இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் "அரசு" என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது, “வலிமை” என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.


அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர "வலிமை" சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ரக "வலிமை" சிமெண்ட், அதிக உறுதியும் (Greater Compression Strength), விரைவான உலரும் தன்மையும் (Quick Setting), அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் (Heat Resistant) கொண்டது.


இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் , தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர்அனில் மேஷ்ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துன்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


50 கிலோ எடை கொண்டதாக வலிமை சிமென்ட் மூட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் மற்றும் சூப்பீரியர் என 2 தரங்களில் வலிமை சிமென்ட் விற்பனை செய்யப்படவுள்ளது. ப்ரீமியம் ரகம் ரூ. 350-க்கும், சூப்பீரியர் ரகம் ரூ. 365-க்கும்  விற்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  


நிலக்கரி தட்டுப்பாடு. விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால் சிமெண்டின் விலை உயர்ந்து வந்தது.  வெளிச்சந்தையில் தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜீன் மாத முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண