முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள  ‘உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வரின்  உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, துரை முருகன் பெற்றுக்கொண்டார்.  ராகுல் காந்தி, உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ்,கவிஞர் வைரமுத்து, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில்,




''இது பெரிய மேடை மற்றும் அரிய மேடை. ஒரு மேடையின் பெருமை அலங்காரத்தாலும், நீள அகலத்தாலும் அல்ல. அது உள்ளடக்கத்தால். உரையாற்றும் பெருமக்களால்.  தான் எழுதிய சுயசரிதையை முதல்வர் ஸ்டாலின் தேசிய அடையாளங்களுடன் வெளியிடுகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மாநிலத்தின் கதை தேசிய அடையாளத்துடன்   வெளியிடுகிறார். 


முகஸ்டாலின் எழுதியுள்ள புத்தகத்தின் முன்னுரையை மட்டுமாவது தமிழ்நாட்டின் பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவியுங்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆளுமைகளை தனக்குள் உள்வாங்கி நடைபோட வேண்டும் என்ற வேகம் ஸ்டாலினிடம் இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டை இந்தியாவே அண்ணாந்து பார்க்கிறது" என்றார்


மேலும் பேசிய வைரமுத்து  சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவம் குறித்து பேசினார். ''அண்ணாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டுமென 16 வயதில்  ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு அண்ணா உடல்நிலை சரியில்லை வேண்டாமென்றுள்ளார். ஆனாலும் பிடிவாதமாக நின்றுள்ளார் ஸ்டாலின். அப்போது அண்ணா , சரியாப்போச்சு.. பிடிவாதத்தின் உன் அப்பாவை மிஞ்சி விடுவாய் போலவே என்றாராம். அந்த கொள்கை பிடிவாதம்தான் ஸ்டாலினை  இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது'' என்றார்.


விழாவில் பேசிய சத்யராஜ், பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், ''எனது ஆங்கிலம் சற்று மோசம்தான். ஆனாலும் நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது ராகுல்காந்திக்காக. ராகுலை நான் வரவேற்கிறேன். அவர் நம்முடைய தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.


ஒரு  சிங்கத்தைப்போல அவர் குரல் கொடுத்தார். நாம் மனிதனாக இருக்க வேண்டுமென்றால் நமக்குள் மனிதநேயம் இருக்க வேண்டும்.  அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும்.  திராவிட முறைப்படி ராகுலை தம்பி என்று அழைக்கிறேன்.  சமூக நீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல்.


4 வருடத்துக்கு முன் கேரளா சென்றபோது சிறந்த முதலமைச்சர் பினராயி என்றேன். எங்களுக்கு அப்படி ஒரு முதலமைச்சர் கிடைக்கவில்லை என்றேன். அப்படியென்றால் பினராயியை தமிழ்நாட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றனர். நான் கூட்டிச் சென்றால் உங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைக்காமல் போவார்கள் என்றேன். இப்போது தேவையில்லை மு.க ஸ்டாலின் இருக்கிறார். பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இடையே யார் சிறந்த முதலமைச்சர் என்று போட்டி நடைபெறுகிறது’’ என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண